Monday, January 27, 2020

சிவ மகுடம் (Book Review)

January 27, 2020 0 Comments


 நூல் : சிவ மகுடம்
 நூலாசிரியர் : ஆலவாய் ஆதிரையான்
 மதிப்பீடு: 4.4/5


கதைச்சுருக்கம் :


தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும் களப்பிரர்களும், சாளுக்கியர்களும் தங்களுக்குள் சமராடுவதில் மட்டும் எப்போதும் சளைத்ததில்லை. அப்படிப்பட்ட பல சமர்க் களங்கள் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் வரலாற்றில் பதிவான ஒரு போர்தான் உறையூர் போர்

கண்ணிமைப் பொழுதில் உறையூரில் நடந்தேறிய ஒரு சம்பவம், சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட ஒரு போரின் துவக்கமானது.அப்படி, கண்ணிமைப்பொழுதில் துவங்கிவிட்ட போர், ஒருநாள் பொழுதில் முடிவுக்கும் வந்துவிட்டது என்றாலும், தமிழகத்தின் பிற்கால சரித்திரத்தையே புரட்டிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன், உறையூரின் மீது போர் தொடுத்தபோது, சிவனையே போற்றி, சிந்தை முழுதும் சிவனையே ஏற்றிய சோழ மன்னன் மணிமுடிச் சோழனும், அவன் மகள் மானியும் அதை எப்படி எதிர்கொண்டார்கள், போரின் முடிவில் என்ன நிகழ்ந்தது என்பனவற்றை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கூறுகிறது இந்த சிவமகுடம். 

சக்தி விகடனில் தொடராக வெளிவந்தபோது, பெரும்பாலோரால் பெரிதும் பாராட்டப்பட்ட சிவமகுடம், இப்போது வரலாற்று நூலாகியிருக்கிறது. ஆன்மிகமும் வரலாறும் கைகோத்துப் பயணிக்கிறது இந்த வரலாற்றுப் பாதையில்! சிவமகுடத்தில் ஒளிவீசும் வரலாற்றைத் தரிசிக்க வாருங்கள்…

மதிப்பாய்வுரை :


புத்தகத்தின் உறை கண்டு அவற்றைத் தீர்மானித்தல் தவறே எனினும் சில சமயங்களில் அதுவே சிறந்த முடிவாகின்றது. அப்படி எனக்கு வியப்புக்குரியதாக நிகழ்ந்ததே இந்த
“சிவ மகுடம்”. சிவன் மீது கொண்ட பேரன்பாலும், வரலாற்றின் மீதுள்ள நாட்டத்தாலும், ஓவியங்கள் மீதான உருமிகையாலும் நான் தடுமாறிய கணத்தில் என்னை அதன் உள்ளுக்குள் தள்ளியே தாழிட்டு கொண்டது இந்த “சிவ மகுடம்”.


இதில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் அனைத்துமே தீரமானவை. அவர்களின் கூர்மதியையும், துணிச்சலையும், சமயோசித புத்தியையும் பாராட்டிட வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்.


சோழர்களும், பாண்டியர்களும் நிகழ்த்திய புதிர் விளையாட்டின் விளைவே உறையூர் போராகும். இப்போர் நிகழ்ந்திடும் முன் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களும், சில அற்புதங்களும், கணித்திட முடியாத திருப்பு முனைகளும், ஸ்யாமின் நேர்த்தியான ஓவியங்களும் இக்கதையின் வலுவாகும்.
தென்னாட்டினைத் தன் வசப்படுத்திக் கொள்ள நினைத்து நிகழ்த்திய போரில் வெற்றி ஆணுக்கோ பெண்ணுக்கோ அல்ல – இறைவனுக்கே!


“மனிதர்கள் மிக வினோதமானவர்கள். எது சாத்தியமோ அதை கவனத்தில் கொள்ளாமல், தங்களது சாமர்த்தியத்தையே அதிகம் நம்புவார்கள். ஆனால், காலமோ அவர்களை விடவும் வினோதமானது. அது, மனிதர்கள் சாமர்த்தியத்துடன் போட்டுவைக்கும் மனக் கணக்குகளையெல்லாம் நொடிப்பொழுதில் தவிடுபொடியாக்கி விடுவதுடன், அவற்றுக்கான தீர்வுகளையும் தனக்குச் சாதகமாக எழுதிக்கொள்ளும்”.

இதில் என்னை வெகுவாக கவர்ந்தவர்கள் – மானியும், கூன்பாண்டியரும். இவர்களின் துணிச்சலையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதங்களையும், எதிரிகளின் வியூகங்களைத் தவிடு பொடியாக்கிடும் மதி நுட்பங்களையும் மெய் மறந்து ரசித்திடாமல் எவராலும் எப்பக்கங்களையும் புரட்டிட இயலாது.


                                                     ஓவியம் © விகடன் பிரசுரம்

இக்கதை நிறைவேறுகையில் எண்ணற்ற கேள்விகளும், சில சந்தேகங்களும் நம்மை ஆழ்ந்த சிந்தனையிலேயே சிறை கொள்ளும். ஏனெனில், இக்கதையின் முதல் பாகம் மட்டுமே இப்புத்தகத்தில் அடக்கம். இரண்டாம் பாகமோ சக்தி விகடனில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றது!

சரித்திரக் கதைகளையும், விறு விறுப்பான கதைக்களங்களையும் விரும்புவோருக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.



Buy Online:





This blog contains affiliate link, when you buy through this link I may earn a commission. This does not cost you anything extra. Thank you for your support. See this page for more details.