வேடிக்கை பார்ப்பவன் (Book Review)
நூல்: வேடிக்கை பார்ப்பவன்
நூலாசிரியர்: நா. முத்துக்குமார்
மதிப்பீடு: 4.4/5
கதைச்சுருக்கம்:
தன்வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது!
வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு - அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா. முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனந்த விகடனில் “வேடிக்கை பார்ப்பவன்” என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில்.
மதிப்பாய்வுரை:
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர்களில் இவரும் (நா.முத்துக்குமார்) ஒருவர். இவரின் எளிய நடைப் பாடல்கள், மிகவும் ஆழமான கருத்துள்ள பிரமிப்பான பாடல்கள் என அனைத்தும் அனைவராலும் ரசிக்கக்கூடிய வண்ணம் அமைந்திருக்கும். இன்றோ இவர் நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் பாடல்களில் உயிர்வாழும் அவருடைய எழுத்துக்களின் போதை போதவில்லை என்று தேடல் கொண்டபோது இப்புத்தகத்தைப் படிக்க முற்பட்டேன்.
எந்த ஒரு பிரபலங்களின் சுயசரிதையையும் இதுவரை நான் படித்ததில்லை ஒருவேளை இப்புத்தகம் போன்றே மிகவும் அழகான நடையில் அவை யாவும் அமைந்திருக்கும் எனில் இனியேனும் அவற்றை தேடிப் படிக்க நான் விழைகிறேன்.
![]() |
Image © விகடன் பிரசுரம்
"இவ்வளவு அழகா ஒருவருக்கு வேடிக்கை பார்க்கத் தெரியுமா? வேடிக்கை பார்த்த அனைத்தையும் இவ்வளவு காலமாக மனதில் ஒருவரால் மறக்காமல் இருக்க முடியுமா?" என்று பல கேள்விகள் எழுகின்றன, இப்புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு . எனது வரிகள் யாவும் மிகைப்படுத்தியவை அல்ல. உண்மையிலேயே இந்நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு வசீகரமானவை! இந்நூலில் ஓவியர் செந்திலின் கைவண்ணங்கள் நா. முத்துக்குமாரின் வரிகளைக் கட்சிதமான காட்சிகளாய் மாற்றி நம் முன்னே வைத்திடும்.
“ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!”
இந்நூலில் அவர் சிறுவயதிலிருந்து ரசித்த பல நிகழ்வுகள் முதல் திரைப்பட உலகிற்குள் வந்த அனுபவங்கள் வரை அவ்வளவு அழகான நடையில் எழுதியிருப்பார். மேலும் அவர் இதுவரை படித்து ரசித்த நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள், கவிதைகள், கதைகள், ரசித்த மனிதர்கள் என பலவற்றையும் இவ்வொரு நூலில் அடக்கியிருப்பார்.
இவர் கல்லூரி நாவலர் தேர்வுக்கான கவிதை போட்டிக்கு சுதந்திரம் தலைப்பில் எழுதிய கவிதை இது
“புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரன் என்னிடமிருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்.”
இவரது கவிதைக்கு ஏராளமான வடிவங்கள் அவற்றில் என் மனம் கவர்ந்த இன்னொன்று
“சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய்ச் சொல்வது? வீடு மாற்றுவதை!”
இவர் ரசித்த பல கவிதைகளை இந்நூலில் மேற்கோள் காட்டியிருப்பார் ஏனோ என் மனமோ இந்த மதிப்பாய்வுரையில் இவர் எழுதிய கவிதைகளை மேற்கோள் காட்டவே முற்படுகிறது!
இந்நூல் முடிவுறும் எழுத்துக்கள்
“பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்து விடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!”
இந்நூலை நா. முத்துக்குமாரின் ரசிகர்களுக்கும், நல்ல எழுத்துக்களை ரசிக்கும் அனைத்து வாசிப்பாளர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
Buy Online:




