வடை போச்சே (Tamil Book Review)
Asmitha
May 22, 2022
0 Comments
வாழ்க்கையில் எதனையும் நின்று கவனிக்க நேரமில்லாமல் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். காரணத்தைக் கேட்டால்,
- எனது கனவிற்காக
- எனது பெற்றோர்களுக்காக
- எனது பிள்ளைகளுக்காக
என ஒவ்வொருவரின் காரணங்களும் வேறுபடும். ஆனால் யாருக்காக ஓடி கொண்டிருக்கிறோமோ, அவர்களுடன் சற்று நேரத்தை செலவழிக்க மறுக்கிறோம் அல்லது மறக்கிறோம்.
இது போன்று என் குழந்தையுடன் நேரம் செலவழிப்பதை அவ்வப்பொழுது பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும் எனது வாழ்க்கையில் எனது கல்லூரி காலக் கட்டத்தில் அறிமுகமான புத்தகத்தின் வாசத்தை முடிந்த அளவு அவள் வளரும் பொழுதிலிருந்து தந்துவிடவும், சிறந்த ஒரு உலகிற்குள் அவளை அழைத்துச் செல்லவும் முயற்சிக்கிறேன்.
அதன் விளைவாக இது போன்று ஊடாடு (Interactive) புத்தகத்தைத் தேர்வு செய்தேன்.
“வடை போச்சே” குழந்தைகளுக்கான ஊடாடு தமிழ் புத்தகம். நாம் அனைவரும் அறிந்த ஒரு கதை; பாட்டி வடை சுட்ட கதை. செம்மையான இக்கதையின் மறு ஆக்கமே இப்புத்தகம்.
புத்தகத்தின் சிறப்பு:
- கதை படி கதாப்பாத்திரத்திரங்கள் குறைவென்றாலும். இப்புத்தகத்தில் எண்ணற்ற விலங்குகள், பறவைகள், அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் பொருள்களை அறிமுகப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு.
- குறட்டுப் பிடி (Pincer grasp)-க்கு ஏற்றவாறு பக்கங்களும், குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக மறைந்துள்ள கதாபாத்திரங்களின் செயல்களும் பாராட்டிற்குரியது.
- அழகான வண்ணங்களும், வரைகலை தொழில்நுட்பம் கொண்டு அமைந்துள்ள கதாபாத்திரங்களும் குழந்தைகள் கண்டவுடன் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்றே கூறலாம்.
இப்புத்தகத்தை ஒன்று (1) முதல் ஏழு (7) வயதான குழந்தைகளுக்கும் மற்றும் புத்தகங்களை மிகச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகபடுத்தலாமா எனத் தயங்கி நிற்பவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.


.gif)
.gif)



