Thursday, April 23, 2020

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (Book Review)




நூல் : ஒரு மனிதன்
ஒரு வீடு
ஒரு உலகம்
நூலாசிரியர் : ஜெயகாந்தன்
மதிப்பீடு : 4.7/5


கதைச்சுருக்கம் :

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன ஜாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

எழுதப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.


மதிப்பாய்வுரை :

“ஜெயகாந்தன்” இந்த பெயரை அடிக்கடி நான் கேள்விப்பட்டு இருக்கேன். இவருடைய புத்தகங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும் என்று என்னிடம் நிறைய பேர் சொல்லி இருக்காங்க. இவரின் எந்த புத்தகத்திலிருந்து தொடங்குவது என்ற என் எண்ணத் தடுமாற்றத்தின் பொழுது எனது நண்பர் இப்புத்தகத்தைப் பரிந்துரைத்தார். “ஸ்பெஷல் தேங்க்ஸ் டு மை ஃபிரண்ட்”. என்னடா இவங்க ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ல எழுதி இருக்காங்கனு யோசிக்காதீங்க. இந்த புத்தகத்தின் கதாநாயகன் “ஹென்றி” இன் பேச்சு வழக்கில் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளைக் காண நேரிடும்.

இதுவரை படித்திடாத ஜெயகாந்தனின் எழுத்துகளைத் தேடிய என் கண்களோ இப்புத்தகத்தின் முன்னுரையிலேயே திகைத்து நின்றது! அவர் எழுத்தாளுமைக்கு அப்பக்கங்களே சான்றாகின. அவ்வளவு எதார்த்தமான முன்னுரையை இதுவரை நான் கண்டதில்லை.

ஹென்றி - இப்படி ஒரு மனிதரைக் காண நேரிடுமா என்ற ஐயுறுதலிலும், இவ்வாழ்வு முடிவதற்குளாவது இவர் போன்றவரைக் கண்டிட மாட்டேனா என்ற தவிப்பின் பிடியிலும் சிக்கிக் கொண்டேன். “I am stranger to myself” இது போன்று அவரைப் பற்றி கூறுவதில் தொடங்கி “எனக்கு கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா நான் சொல்லுகிறேன்?” என்ற பொதுவான கூறுதல் வரை தனித்தே நிற்கிறார் இவ்வுலகிலுள்ள அனைவரிடமிருந்தும்.


“கடவுளை நம்பறதுக்கும் நம்பாமல் இருக்கிறதுக்கு ‘நான் யாரு'ன்னுதான் எனக்குத் தெரியலே. கடவுள்ங்கறது நம்ப நம்பிக்கை மட்டுமா? எனக்கும் என்னோட நம்பிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்?”


ஹென்றியின் பப்பா – ஹென்றிக்கு அமைந்தது போலான தந்தையே இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் அமைந்திருந்தால் ஒருவேளை இவ்வுலகில் உள்ள மனிதர்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ என்னவோ?!


“உன் மதம் எவ்வளவு உயர்வா இருந்தாலும் அதுக்காக இந்தக் குழந்தை தலையிலே அதைச் சுமத்த வேணாம். அவனுக்காத் தோணினா அப்புறமா கிறிஸ்துவனாவோ, இந்துவாவோ, முஸ்லிமாவோ அவன் இஷ்டப்படி ஆகட்டும்… நாம்ப அவனை நல்ல மனுஷனா ஆக்குவோம் - அவன் வழிப்படி ஆக்குவோம்”


தேவராஜன் - ஒரு மனிதரிடம் பழகிய சிறு நாழிகையில் துளிர்த்த நட்பின் அடிப்படையை கொண்டே அவர் வாழ்விலும், இல்லத்திலும் ஹென்றிக்கு இடம் தருதலிலும், அடுத்தவர் பிரச்சினைகள் நமக்கேன் என்று ஒதுங்காமல் கடைசி வரை உறுதுணையாக நின்று உதவுவதிலும் இவர் நற்குணங்கள் தனித்து தென்படுகின்றன.


“இன்னொருத்தரை நம்ம மனசால கெடுத்தா - அது கூடத்தாங்க ஒழுக்கங்கெட்ட காரியம்!”



அக்கம்மா – நம்ம வாழ்க்கை ஏன் இப்படியானது என்று துவளாமல் முடிந்தவரை அடுத்தவங்களுக்கு உதவனும், தம்பி வாழ்க்கை நல்லா இருக்கணும்னு பார்த்து பார்த்து பண்ற ஒவ்வொரு செயலும் அவங்க அழகைச் சொல்லும்.


“நல்லபடியா இருந்துச்சின்னா கூழோ தண்ணியோ ஊத்தி இங்கேயே நம்ம வச்சிக்கலாம். என்ன, அந்த பொண்ணு வயித்துக்குச் சோறு போட முடியாதா நம்மளால?”


துரைக்கண்ணு – ஒருத்தர் பேசுற வார்த்தைகளை வைத்தோ கரடுமுரடான தோற்றம் வைத்தோ மதிப்பிடுதல் எவ்வளவு பெரிய தவறென்பதையும், உண்மையான அன்பை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் காண்பிக்க நேரிடும் என்பதையும் இவர் கதாபாத்திரம் பதிய வைத்திடும்.

பேபி – இந்த கதாபாத்திரத்தை முழுதாய் புரிந்திட இயலவில்லை மேலும் புரிந்திட வேண்டும் என்ற தவிப்பில் சிக்க வைத்தே இக்கதை நிறைவேறுகிறது.

பல சுவாரஸ்யமான, உண்மையான, மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்கள் மனதில் பதிந்து விடை பெற மறுத்திடும் இந்நூல் முடிவுறுகையில்.

இந்த மாதிரியான மனிதர்களை நேரில் கண்டிட மாட்டேனா, இவர்கள் வாழ்க்கையில் பிறகென்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திட இயலாதா, இவர்களின் நினைவை காலப்போக்கில் என்னால் மறந்திட நேருமா என்ற பல வினாக்கள் சூழ்ந்த நிலையில் சிக்கிக் கொண்டேன் இறுதியில்.


யதார்த்தமான, ஆழமான கதைகளை நேசிப்போருக்கும், ஜெயகாந்தனின் ரசிகர்களுக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.



Buy Online:




This blog contains affiliate link, when you buy through this link I may earn a commission. This does not cost you anything extra. Thank you for your support. See this page for more details.

4 comments:

  1. என் கண்ணில் வியர்வை வரச்செய்த கதை.. படிக்க துவங்கிய நேரம் முதல் கதைக்குள் அழைத்து சென்ற ஒரு சில கதைகளுள் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன் 🤩😁🙌🙌🙌

    ReplyDelete
  3. […] Previous postஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் […]

    ReplyDelete

If you have any doubts, please let me know.