Monday, June 1, 2020

பொன்மகள் வந்தாள் (Movie Review)






கதைச்சுருக்கம் :


ஊட்டியில் வாழ்கின்ற 'பெட்டிசன்' பெத்துராஜ் (பாக்கியராஜ்) 2004-ஆம் ஆண்டினைச் சார்ந்த ஒரு பழைய வழக்கினை மீண்டும் விசாரிக்க வழக்குத் தொடுக்கின்றார். அதில் 'சைக்கோ ஜோதி' என்ற தொடர் கொலையாளி பல குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். பெத்துராஜின் மகளான வெண்பா (ஜோதிகா) முதல் வழக்காக பலரின் எதிர்ப்பையும் மீறி இதனை எடுக்கிறார். இவ்வழக்கின் அரசுத்தரப்பு வழக்கறிஞரும் மாற்றப்படுகின்றார். வெண்பாவிற்கு எதிராக வாதிட குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினத்தை (பார்த்திபன்) நியமிக்கிறார் அரசியல்வாதியான வரதராஜன் (தியாகராஜன்). இந்த வழக்கை மறுபரிசீலிப்பதேன்? புதைந்த உண்மைகள் வெளிப்பட்டதா? என்பதை நீதிமன்ற நாடக பாணியில் காட்சிப்படுத்திருக்கின்றனர்.





மதிப்பாய்வுரை :


மிகவும் முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினையைக் கதைக்களமாக எடுத்துச் சென்று மக்களிடம் சேர்க்க முற்பட்டிருக்கிறது இந்தப் படம்.


ஜே.ஜே.ப்ரட்ரிக் முதல் படமே வணிக ரீதியாக எடுக்காமல் ஒரு நல்ல கருத்தை பதிய வைக்க முயற்சித்ததற்கே பாராட்டிட வேண்டும். அவர் கதாபாத்திரங்களுக்காக தேர்ந்தெடுத்த அனைவருமே கச்சிதப் பொருத்தம்.


நீதிமன்ற காட்சிகளும், வசனங்களும் தனித்து தென்படுகின்றன. ஆனால், கதையைச் சற்றே கணித்திடும்படி அமைத்ததும், படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல தவறியதும் படத்தின் தரத்தை சற்றே கீழ் இறக்குகிறது.


எவ்வளவு அழுத்தமான சுமையை வைத்தாலும் அதை அவரவர்கள் நடிப்பில் நயநேர்த்தியாக உயிர் கொண்டுவரும் நடிகர்களுக்கு அழுத்தம் தர இலேசாக தவறியிருக்கிறார் இயக்குனர்.


‘96’ திரைப்பட புகழ் இசையமைப்பாளர் “கோவிந்த வசந்தா” ஊட்டியின் அழகிற்கும், நீதிமன்ற காட்சிகளுக்கும் அவர் இசையால் உயிர் தந்து நம் அனைவரையும் கதையோடு பயணிக்க உதவுகிறார்.


“சிறுவர் துஷ்பிரயோகம்” என்ற கருத்தை மிகவும் யதார்த்தமாக, தினசரி ஆங்காங்கே நிகழ்கின்ற கதையை மையப்படுத்தி அமைத்திருப்பது பாரட்ட வேண்டியது.


நாம் அன்றாடம் நிகழும் கொடுமையைக் கால வேகத்தில் கவனிக்க தவறுவதைச் சுட்டிக்காட்டும் "ஜோதிகா" அவர் நடிப்பால் நம்மை மிரள வைக்கிறார்.


பார்த்திபனின் வசனங்கள் ரசிக்கும்படியாகவும், பாக்கியராஜின் நடிப்பு யதார்த்தமாகவும், தியாகராஜனின் வில்லத்தனம் போதுமானதாகவும் அமைந்துள்ளது.


எல்லா காலத்திலும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டே இருக்கிறது, இந்த மாதிரியான வழக்கிற்கு தீர்ப்பும் கால தாமதமாகவே தரப்படுகிறது என்பதே நிசப்தமான மனதை நெருடும் உண்மை.


இதை தட்டிக்கேட்டிட எல்லா நேரமும் ஏதோ ஒரு “பொன்மகள்” வரவேண்டிய அவசியமில்லை. ஆனால், ஆண்மகன்கள் அனைவரும் “பொன்மகன்களாக” மாறினாலே இவையாவும் கடந்த காலத்தில் மட்டுமே நிகழ்ந்த ஒன்றாக எதிர்காலத்திற்கு மாற்றியமைக்கலாம்.


தாமதமாக தரப்படும் நீதியும் அநீதியே என்ற கருத்தை மனதில் பதியச் செய்கிறது இப்படம்.


நல்ல சமூக பிரச்சினைகளைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்களை ரசிப்போருக்கு இப்படத்தை பரிந்துரைக்கிறேன்.





                                            Ponmagal Vandhal Trailer

You Can Watch This Movie In  Amazon Prime :






No comments:

Post a Comment

If you have any doubts, please let me know.