Wednesday, September 2, 2020

பார்த்திபன் கனவு (Book Review)



கதைச்சுருக்கம்:


ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசரான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசை மீட்கவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் எனவும் அறிவூட்டுகின்றார்.

பல்லவ மன்னரான நரசிம்மவர்மர், அவரது மகள் குந்தவி மற்றும் சிவனடியார் ஆகியோரால் பல சுவாரசியமான திருப்புமுனைகளுடன் இக்கதை நகர்கிறது.
இறுதியில் சோழ நாடு பல்லவரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதா? பார்த்திபனுடைய கனவு நிறைவேறியதா என்பதே இப்புத்தகத்தின் கதைக்களம்.


மதிப்பாய்வுரை:


கல்கியின் புகழ் அறியாதோர் யாருமில்லை இப்பாரதத்திலே என்று உரைத்தாலும் மிகையாகாது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புக்களும், எழுத்தாற்றலும் இத்தலைமுறைக்கும் பிரசித்தி பெற்றவை. இவற்றிலிருந்தே யூகித்து விடலாம் அவரின் படைப்புக்கள் எவ்வளவு வசீகரத் தன்மை கொண்டதென்று.

பார்த்திபன் - நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தினசரி வாழும் மன்னர். அவரின் வீரத்தையும் விவேகத்தையும் கண்டால் புகழ்ந்திடவே தோன்றும். அவரின் மனைவி அருள்மொழி தேவியும் எவ்விதத்திலும் சளைத்தவரல்ல. கணவரின் கனவை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். இவர்களின் மகன் விக்ரமன்.


"தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான்! செருப்பு தைக்கும் சங்கிலியனும் ஒன்றுதான். ஆனாலும், இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாக கருதுகிறார்கள்."



விக்ரமன் - பெற்றோருக்கு ஏற்றார்போல் சோழகுலத்தைத் தலை நிமிர்த்திவிட இறுதிவரை போராடினார். எப்பேர்ப்பட்ட வீரனாயினும் குந்தவி போன்ற பெண்ணின் காதல் வலையில் சிக்க நேர்ந்தால் எவ்வாறெல்லாம் மாற்றம் நேரும் என்பதை தனது எழுத்தாற்றலால் மிகைபடுத்தாமல் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார் கல்கி. இறுதியிலோ, இவர்களின் காதல் போதையில் நாமும் அகப்பட்டு தவித்திடவே நேரிடுகிறது.


"இனிமேல் உன்னை பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம்."


நரசிம்மவர்மர் - பல்லவ நாட்டு சக்கரவர்த்தியும் குந்தவியின் தந்தையும் ஆவார். இவரின் வீரத்தினாலும், சிற்பக்கலை ஆற்றலினாலும் மிகவும் பிரசித்தி பெற்றவர். நரபலி போன்ற கொடூரமான நம்பிக்கைகளை தகர்த்தெறிய முயன்றவர். இவர் கொடுத்த ஒரு வாக்கிற்காக என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நிறைவேற்ற தவிக்கும் இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கின்றார்.


"இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது; மற்றதெல்லாம் அநித்தியம்."


பொன்னன் - சோழநாட்டு படகோட்டி. இவரின் மனைவி வள்ளி. இவர்களின் கதாபாத்திரம் கதைக்கு மிகப்பெரிய வலுவாகும். எதார்த்தமான கதாபாத்திரங்களாய் உருவாக்கி அவர்களைக் கதை முழுவதும் பயணிக்க வைத்ததால் இவர்களை ரசித்திடாமல் யாராலும் இப்புத்தகத்தைப் படித்திட இயலாது. சோழநாட்டு ராஜ குடும்பத்தினரிடம் இவர்கள் கொண்ட விசுவாசம் எல்லையற்றதாய் திகழ்கிறது.

அனைத்து கதாபாத்திரங்களையும் கச்சிதமாக அமைத்துள்ளார். போதுமான சுவாரசியங்களுடன் இக்கதை இறுதிவரை விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. சோழ மகாராஜா பார்த்திபன் கண்ட கனவு நிறைவேறியதா என்பதை சில திருப்பங்களுடன் நயநேர்த்தியாக ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் அமரர் கல்கி.

சரித்திரக் கதைகளை ரசிப்போருக்கும், கல்கியின் எழுத்தாற்றலில் பேரன்பு கொண்டுள்ள ரசிகர்களுக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.


Buy Online:





This blog contains affiliate link, when you buy through this link I may earn a commission. This does not cost you anything extra. Thank you for your support. See this page for more details.

4 comments:

  1. கல்கியின் காவியங்கள்🔥

    ReplyDelete
  2. உனது வரிகளின் எதிரொலி… விரைவில் பார்த்திபன் கனவு என் விழி வழியே 😍

    ReplyDelete
  3. மிக்க நன்றி 🙏🙏🙏

    ReplyDelete

If you have any doubts, please let me know.