Tuesday, August 27, 2019

வந்தார்கள்.. வென்றார்கள்! (Book Review)


நூல் : வந்தார்கள்.. வென்றார்கள்!
நூலாசிரியர் : மதன்
வகை : வரலாற்று நூல்
வெளியிடப்பட்ட நாள் : ஜனவரி 1994
மதிப்பீடு : 4/5





இந்த புத்தகத்தில் இந்தியாவுக்கு வந்தவர்களின், முக்கியமாக இந்தியாவை கைப்பற்றி ஆட்சி அமைத்து வென்றவர்களின், அதில் தட்டுத்தடுமாறி ஆட்சியை வழிநடத்தி தோற்றவர்களின் கதைத் தொகுப்புகள் அடங்கும். இவர்களால் வெறும் ஆட்சி மட்டும் நடந்திருக்குமா என்ன? இவர்களால் பல்லாயிரக்கணக்கான செல்வங்களும், ஆபரணங்களும் கொள்ளையடித்தாகிற்று! முக்கியமாக விலைமதிப்பற்ற “கோஹினூர்” வைரமும்!!!


சற்று மனதை பலப்படுத்திக் கொண்டே இப்புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கலாம். ஏனெனில், கதையின் தொடக்கமே மங்கோலிய பரம்பரையைச் சேர்ந்த கொடுங்கோல் மன்னர் “தைமூரை” பற்றியது. இவர் இந்தியாவில் தங்கி இருந்தது வெறும் ஆறு மாதங்களே, இருப்பினும் இவர் நடத்திய வெறியாட்டத்திற்கு இணையாக சரித்திரத்தில் மிகச் சில நிகழ்ச்சிகளையே குறிப்பிட முடியும். இவர் சிந்து நதியைக் கடந்து பஞ்சாப் முழுவதுமாய் சூறையாடி சுமார் ஒரு லட்சம் மக்களை அடிமையாக்கினார்.இடையூறு செய்பவர்களிடம் இரக்கம் காட்டுவது, எதிரிகளை ஏனோதானோ என்று விட்டுவிடுவது அவருக்குப் பிடிக்காத ஒன்று. ஆகையால் அந்த ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளும் சீவப்பட்டன. டெல்லியில் 10 நாட்களாக இவர் நடத்திய வெறியாட்டத்தின் விளைவு:அவர் இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகும் இரண்டு மாதங்களுக்கு டெல்லியில் யாருமே நடமாடவில்லை.


இங்கே பரிட்சையில் பலமுறை தோல்வியடையும் மாணவரை கஜினி முகமதுவுடன் நாம் தமாஷாக ஒப்பிடுகிறோம். உண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மறுபடி மறுபடி இந்தியாவுக்கு வரவில்லை. அனேகமாக அவருடைய 17 படையெடுப்புகளுமே வெற்றிதான்.இவரால் சோமநாதர் கோயிலுக்கு உச்சகட்ட பயங்கரம் நிகழ்ந்தது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்று, கோயிலினுள் சென்று சிவலிங்கத்தை தூக்கி வந்து கோயிலின் முன் போட்டு உடைத்தார்!!!


வஞ்சகம் மட்டுமல்ல, வீரமும் ஏராளமாக இருந்தது அலாவுதீன் கில்ஜிக்கு. கிளர்ந்தெழுந்த பல சிற்றரசர்கள் சுல்தானின் வாள்வீச்சில் ஓட்டமெடுத்தார்கள். இவரின் ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தன.வியாபாரிகள் இரவு நேரத்தில் கூட பயம் இல்லாமல் தங்கள் சரக்குகளுடன் நாடு முழுவதும் பயணித்தனர். ஒரு கொள்ளைக் காரர்கள் கூட நாட்டில் இல்லாததுதான் காரணம். போகப் போக, அதிகாரபோதை தலைக்கேற, ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்!’ என்ற எண்ணம் அலாவுதீன் கில்ஜியின் சர்வாதிகாரத்துக்கும் முடிவு கட்டியது.


பாபர் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது 11 வயது சிறுவன். பல சோதனைச் சூறாவளிகளையும் கடந்து காபூலைக் கைப்பற்றிய போது அவருக்கு வயது 22. பல போர்களுக்குப் பிறகு வங்காளமும் பாபரின் வாள்முனையில் பணிந்தது. இதற்குப் பிறகு வட இந்தியா முழுவதும் ஒரு விஸ்தாரமான மொகலாய சாம்ராஜ்யம் உருப்பெற்றது!


அக்பரின் [எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த அரசர்] ஆட்சியில் முகலாய சாம்ராஜ்யம் மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே கோதாவரி நதி வரையிலும் கட்டுப்பாடாக விரிந்து பரந்திருந்தது. வாள் முனையில் ஒரு இஸ்லாமிய ஆட்சியை இந்திய மண்ணில் திணிக்க முயல்வதற்கு பதிலாக, அடிப்படையில் இந்தியா இந்துக்களின் நாடு என்பதை புரிந்துகொண்டு, பெரும்பான்மையினரின் நன்மதிப்பைப் பெற, வாளைவிடக் கூர்மையான அன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார் அக்பர். அந்த அணுகுமுறை அவருக்குப் பெரும் வெற்றியை தேடித்தந்தது. சொல் வேறு - செயல் வேறு என்ற நாடகமும் போடவில்லை அவர்.



தாஜ்மஹால் பற்றி ஷாஜஹான் சுருக்கமாக எழுதி வைத்த குறிப்பு - 'இந்த கல்லறையை கற்பனை செய்தவர் எப்படி பூமியில் பிறந்தவராக இருக்க முடியும்? சொர்க்கத்தில் இருந்து வந்து சேர்ந்தது இதற்கான வரைபடம் என்பதற்கு சாட்சியம் தேவையா..?! ஷாஜகான் அவரின் மூத்த மகன் தாரா ஷுகோவின் மேல் அதிக அன்பு செலுத்தி ஔரங்கசீப்பை ஒதுக்கியது அவருக்கே வினையாக முடிந்தது. ஷாஜகானின் மறைவுக்குப் பிறகு, தோல்வி என்பது வறட்சி சூழ்ந்த, முடிவில்லாத பாலைவனமாக ஔரங்கசீப்பை படிப்படியாக சூழ்ந்து கொண்டது. இவருக்குப் பிறகு சரியாக ஆட்சியாளர்கள் அமையாததால் இந்தியா பிரிட்டிஷின் கைக்குள் சேர்ந்தது!



இந்த புத்தகத்தில் பல சுவாரசியமான, உண்மையான, நிலைகுலைய வைக்க கூடிய சம்பவங்களும், அரசர்களின் ஆட்சி முறைகளும் அடங்கும். நான் மேல் குறிப்பிட்ட அரசர்களின் எண்ணிக்கை சொற்பமே!!! மதனின் நேர்த்தியான, வசீகரிக்க கூடிய எழுத்துத் திறமைக்கு தலை வணங்குகிறேன்.




Buy Online:






This blog contains affiliate link, when you buy through this link I may earn a commission. This does not cost you anything extra. Thank you for your support. See this page for more details. 

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know.