வலை தொடர்: சுழல்
மொழி: தமிழ்
படலங்கள்: 8
வெளியீடு: 17 ஜுன் 2022
பிணையம்: அமேசான் பிரைம் வீடியோ
விமர்சகர் மதிப்பீடு: 4.6/5
கதைச் சுருக்கம்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சம்பலூர் என்ற நகரில் அங்காளம்மனுக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்பொழுது ஒரு பெண் கடத்தப்படுகிறாள், அவளை கண்டுபிடிக்க முயற்சிக்கையில் பல உண்மைகள் வெளியாகின்றன.
திரைவிமர்சனம்:
இக்கதை நமது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சினையைக் கையாள்கிறது. அந்த பிரச்சனை என்ன என்பதை மூடி மறைத்தே இந்த விமர்சனத்தை நான் எழுத போகிறேன். ஏனென்றால் இந்த தொடர் அவ்வளவு நேர்த்தியாகவும் பலவிதமான கோணங்களிலும் ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.
சக்கரவர்த்தி (கதிர்) - சப் இன்ஸ்பெக்டர், இவரின் துறு துறு நடிப்பு பாராட்டுக்குரியது. பிரச்சினையைக் கண்டுபிடிப்பதற்காக பல விதத்தில் பெரும்பாடுபடுகிறார். ஆனால், அவரின் தீர்மானம் சில சிக்கல்களையும் கதை களத்தில் கொண்டு வருகிறது. அதுவே திருப்புமுனையாகவும் அமைகிறது சில இடங்களில்.
ரெஜினா (ஷியா ரெட்டி) – இன்ஸ்பெக்டர். இவரது நடிப்பு, தைரியமான தோரணை அனைத்தும் கனகச்சிதம். இந்த கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம். கதையில் உள்ள முக்கியமான கதாபாத்திரமும் ஆவார். தன் பிள்ளை மீது உள்ள பாசத்தை நிஜ பிள்ளையோ என நம்பும் அளவிற்கு நன்கு தனது நடிப்பினால் வெளிப்படுத்தி இருப்பார்.
சண்முகம் (பார்த்திபன்) – சங்கத் தலைவர். நிதானமாகவும், தெள்ளத் தெளிவாகவும் தனது கதாபாத்திரத்தைக் கையாண்டுள்ளார். தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை அறிந்த பின் இவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அனைவரும் பாராட்ட வேண்டியவை.
இதில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. அவற்றில் சில நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்), நிலா(கோபிகா), அதிசயம் (ஃப்ரெட்ரிக் ஜான்சன்), திலோக் (ஹரிஷ் உத்தமன்). அனைவரின் நடிப்பு அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவே. அனைவரும் பாராட்டும் வண்ணம் நடித்துள்ளனர்.
இயக்கம், திரைக்கதை, இசை என அனைத்து குழுவும் நன்கு செயல்பட்டுள்ளனர். விறுவிறுப்பாகவும், உண்மையைக் கண்டுபிடிக்காத அளவும், மயான கொள்ளை என்ற ஒரு திருவிழாவுடன் கதையினை சேர்ந்தே பயணித்திட செய்துள்ளனர்.
இதில் உள்ள மைய கருத்து இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கொடூரமான செயல் என்பதால் இதனை அனைத்து தரப்பினரும் தெரிந்துகொண்டு அவர்களது பிள்ளைகளை பாதுகாப்பாகவும் தைரியமாகவும் வளர்த்திடுமாறு அறிவுறுத்துகிறேன்.
இந்த வலைத் தொடரை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know.